டாஸ்மாக் கடைகளில் ரூ.1 கூடுதலாக வசூலித்தாலும் பணியிடை நீக்கம் - அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!

 
டாஸ்மாக் விக்னேஷ்

சட்டப்பேரவையில் டாஸ்மாக் துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் விக்னேஷ், அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக ரூ.1 கூடக் கூடுதலாக வசூலிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

டாஸ்மாக்

கடந்த 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 எனத் உயர்த்தப்பட்ட ஊதியம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.486.90 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மேலும் வலுப்படுத்தப்படும் வகையில், ரூ.2.58 கோடி மதிப்பில் 10 அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட 10 கண்காணிப்பு ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.

டாஸ்மாக்

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்று, விடுதலையாகி மனம் திருந்திய நபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மறுவாழ்வு நிதி ரூ.50,000-த்திலிருந்து ரூ.1,00,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. மெத்தனால் மற்றும் அது சார்ந்த மூலப்பொருட்கள் சட்டவிரோதமாகத் திசை திருப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கில் புதிய மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படவுள்ளது.

உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளுதல் மற்றும் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை முழுமையாக மின்னணுமயமாக்க ரூ.1.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒதுக்கப்படும் நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.