வேட்டி, சேலை, பவானி ஜமுக்காளம் தயாரிப்புகளை நேரில் பார்வையிட்டு அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!

 
அமைச்சர் விஜய் பாலாஜி அமைச்சர் விஜய் பாலாஜி

தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விஜய் பாலாஜி, தனது துறையின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு புதிய வடிவமைப்பு ஆடைகள் மற்றும் பாரம்பரியத் தயாரிப்புகளை நேரில் பார்வையிட்டு முக்கிய ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ ஆய்வுக் கூட்டத்தில், கைத்தறித் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும், சந்தையில் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறையால் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய வடிவமைப்பு வேட்டிகள், சேலைகள், பவானி ஜமுக்காளங்கள் ஆகியவற்றை அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு அதன் தரம் குறித்துக் கேட்டறிந்தார்.

பாரம்பரிய ஆடைகள் மட்டுமின்றி, தற்கால இளைஞர்களைக் கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன ரக உடைகள் மற்றும் பெண்களுக்கான குர்திகள் உள்ளிட்ட புதிய ஆடைகளையும் அவர் ஆய்வு செய்து, அவற்றின் விற்பனை உத்திகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கைத்தறித் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்ட இந்த முக்கியக் கூட்டத்தில் துறையின் மிக முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் தி.ந.வெங்கடேஷ், துணிநூல் ஆணையர் வெ. ஷோபனா, மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு உள்ளிட்ட பல உயர் அரசு அதிகாரிகள் மற்றும் துறைச் சார்ந்த வல்லுநர்கள் நேரில் பங்கேற்று அமைச்சரிடம் தற்போதைய உற்பத்தி நிலவரங்களை விளக்கினர்.