அமைச்சர் தலையீடு.. மிரட்டல்... 3 மாணவர்கள் பலியான வழக்கில் திடீர் திருப்பம் - கோபிகாவின் பெற்றோர் குற்றச்சாட்டு!

 
கோபிகா மினி விபத்து கார்

கேரள மாநிலம் நெடும்பாசேரி பகுதியில் நிகழ்ந்த அதிவேக மினி கூப்பர் கார் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி கோபிகாவின் குடும்பத்தினர், இவ்வழக்கை முழுமையாகச் சீர்குலைக்கவும், முக்கியக் குற்றவாளியைக் காப்பாற்றவும் தீவிர முயற்சிகள் நடந்து வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய அக்குடும்பத்தினர், காவல்துறையின் நடவடிக்கைகளில் உள்ள குளறுபடிகள் குறித்தும், தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற தங்களது கடும் சந்தேகங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கோபிகாவின் குடும்பத்தினர், இவ்வளவு கடுமையான மற்றும் தீவிரமான குற்றச் செயலில் ஈடுபட்ட பிறகும், குற்றம் சாட்டப்பட்ட சுஹைல் சஜீவ் சாதாரணச் சிறைக்குப் பதிலாகச் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினர். இது இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி என்று அவர்கள் நம்புவதாகத் தெரிவித்தனர்.

கேரளா சொகுசு கார் விபத்து

"எங்களுக்கு நீதி கிடைக்குமா என்பதில் கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது. காவல்துறையின் விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. உயர் அதிகாரிகளிடமிருந்து அவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு குறிப்பிட்ட செல்வாக்குமிக்கப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு உதவுவதற்காக அதிகார பலம் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம்" என்று அச்சம் தெரிவித்தனர்.

விபத்து நிகழ்ந்ததுடன் நின்று விடாமல், தனது மகளையும் தங்களது முழு குடும்பத்தையும் குறிவைத்துச் சமூக வலைதளங்களில் மோசமான வசைச்சொற்களும் அவதூறுகளும் பரப்பப்பட்டு வருவதாக கோபிகாவின் தந்தை வேதனை தெரிவித்தார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா உட்படச் சிலர் தங்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உயிரிழந்த கோபிகா கே.எம்.எம் கல்லூரியின் துணைத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் என்பதும், ஐந்தாண்டுகளுக்கும் மேலாகச் தீவிர என்.எஸ்.எஸ் தொண்டராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய நற்பெயர் கொண்ட ஒரு மாணவிக்கு எதிராக நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள், குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடர்புடையவர்களால் திட்டமிட்டு நடத்தப்படும் நற்பெயர்க் களங்கப்படுத்தும் செயல் எனவும் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

வழக்கின் விசாரணை மற்றும் ஆவணங்கள் குறித்துக் குடும்பத்தினர் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. "முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் மது போதையில் வாகனம் ஓட்டியதாக முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதை நாங்கள் தாமதமாக அறிந்து கொண்டோம். அதுமட்டுமின்றி, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலுக்குப் போடப்பட்ட தையல்கள் பின்னர் அகற்றப்பட்டு, மற்றொரு இரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இது வழக்கில் மிக முக்கியமான ஆதாரங்களைத் திரிப்பதற்கும், குற்றவாளியைக் காப்பாற்றுவதற்கும் செய்யப்பட்ட நாடகமாக இருக்கலாம் என நாங்கள் வலுவாகச் சந்தேகிக்கிறோம்" என்று கோபிகாவின் தந்தை கண்ணீருடன் தெரிவித்தார்.

கார்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னர்காடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் எம்.ஆர். பிரதீப் குமாரின் மகள்தான் உயிரிழந்த கோபிகா ஆவார். நெடும்பாசேரியில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் கோபிகாவைத் தவிர மேலும் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் வயநாடு மாவட்டம் கல்பேட்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் சந்தோஷின் மகள் தேவிகா ஆவார்; மற்றொருவர் கர்நாடகா மாநிலம் கூர்க் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிமின் மகன் இயாஸ் (21) ஆவர்.

இந்த விபத்தில் விபத்திற்குக் காரணமான மினி கூப்பர் காரை ஓட்டியவரும், இஹா டிசைன்ஸ் ஆடை வணிக நிறுவனத்தின் தலைவரான சஜீவின் மகனுமான சுஹைல் சஜீவ் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான நூஹா ஆகியோர் இவ்வழக்கில் முதல் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். செல்வாக்குமிக்கப் பின்னணியைக் கொண்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரின் தொடர்ச்சியான இந்தக் குற்றச்சாட்டுகள் கேரளாவில் பெரும் பரபரப்பையும், நீதி கோரிய போராட்டங்களையும் தீவிரப்படுத்தியுள்ளன.