இன்று விசிக, ஐஎம்யூஎல் , மேலும் 2 அமைச்சர்கள் பதவியேற்பு!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

 

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை நேற்று மே 21 ஆம் தேதி மிக முக்கிய கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையான லோக் பவனில் நடைபெற்ற பிரத்யேக விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முறைப்படி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் தமிழக ஆட்சியில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளது. காங்கிரஸின் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் சுற்றுலாத் துறை அமைச்சராகவும், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பி. விஸ்வநாதன் உயர் கல்வித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி விரிவாக்கத்தின் மூலம் முதலமைச்சர் விஜய் உட்படத் தமிழக அமைச்சரவையின் ஒட்டுமொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், தற்போதைய விரிவாக்கத்தில் விஜய்யின் முக்கிய கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் இன்னும் வழங்கப்படவில்லை. இவர்களுக்காக அமைச்சரவையில் தலா ஒரு இடம் வீதம் மொத்தம் 2 இடங்கள் தற்போது காலியாக வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்றும், அதன் பிறகு அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை சட்டப்பூர்வ வரம்பான 35 ஐ எட்டும் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.