மிஸ் புனே அழகி திவிஷா மரண வழக்கில் திடீர் திருப்பம்... மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு - நீதிமன்றத்தில் சரணடைந்த கணவர்!
மராட்டிய மாநிலத்தின் பிரபல மாடல் அழகி திவிஷா சர்மா தற்கொலை வழக்கில், கடந்த 10 நாட்களாகத் தலைமறைவாக இருந்த அவரது வழக்கறிஞர் கணவர் சமர்த் சிங் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், திவிஷாவின் உடலை இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற 'மிஸ் புனே' அழகி போட்டியில் பங்கேற்றுப் பட்டம் வென்றவர் பிரபல மாடல் அழகி திவிஷா சர்மா (31). இவருக்கும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவருக்கும் திருமணம் ஆகி, அவர்கள் போபால் நகரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் திவிஷா சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். திவிஷாவின் மரணத்தில் மாபெரும் மர்மம் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், முறையான விசாரணை நடத்தும் வரை உடலை வாங்க மறுத்துப் போபாலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போபால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், திவிஷாவின் கணவர் சமர்த் சிங் தலைமறைவானார். போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், கடந்த 10 நாட்களாகப் போலீசாருக்குக் கண்ணாமூச்சி காட்டி வந்த சமர்த் சிங், ஜபல்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சரணடைந்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சமர்த் சிங்கின் தாயாரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரிபலா சிங், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஏற்கனவே நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டல் மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான வழக்கறிஞர் சமர்த் சிங் மீது 'பார் கவுன்சில்' தற்போது கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது. அவரை வழக்கறிஞர் சட்டப் பணியில் இருந்து உடனடியாக அதிரடி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மறுபுறம், திவிஷாவின் குடும்பத்தினர் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் விடுத்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு நீதிமன்றம், திவிஷாவின் மரணத்தில் உள்ள உண்மைகளைக் கண்டறிய அவரது உடலுக்கு இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை மேற்கொள்ள அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமர்த் சிங்கிடம் போலீசார் நடத்தும் தீவிர விசாரணையின் மூலம் இந்த மர்ம மரணத்தின் பின்னணி விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
