ஹார்மூஸில் சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்; தீப்பிடித்து எரிந்த கப்பலிலிருந்து ஊழியர்கள் மீட்பு!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல் போக்கால், உலகின் முக்கியச் கடல்வழிப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வழியாகச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து கடல்சார் வர்த்தகச் செயல்பாடுகளுக்கான அமைப்பு வெளியிட்ட தகவலின்படி ஓமன் நாட்டின் கும்ஜார் நகருக்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் ஹார்மூஸ் ஜலசந்தியைக் கடந்து சென்று கொண்டிருந்த போது இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை மோதிய அதிர்ச்சியில் கப்பலின் ஒரு பகுதியில் பலத்த தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தாக்குதல் நடந்த உடனே உஷாரான கப்பல் ஊழியர்கள், அவசர மீட்புப் படகுகள் மூலம் கப்பலை விட்டு உடனடியாக வெளியேறினர். அவர்கள் அனைவரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கப்பலில் எரிந்து வரும் தீ இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், ஊழியர்கள் யாரும் இன்றி கப்பல் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வழியாகப் பயணிக்கும் அனைத்துச் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
