சவுதி விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் - 12 பேர் பலி; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
சவுதி தாக்குதல்

சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏமனில் சவுதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி திடீரென ஏவுகணைகள் பாய்ந்து வந்து வெடித்தன.

இந்தத் தாக்குதலில் ஒரு அமெரிக்கர், 2 வங்காளதேசத்தவர்கள் மற்றும் 4 சவுதி குடிமக்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 309 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பின் அதிர்வால் விமான நிலையத்தின் கூரைகள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ரியாத் விமான நிலையத்தைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அறிவித்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மக்கா மற்றும் மதினா தவிர மற்ற சவுதி வான்வழிகளை சர்வதேச விமானங்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகச் சவுதி அரேபியா மேற்கொள்ளும் பதில் தாக்குதலில் அமெரிக்கப் படைகளும் இணைவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.