அபுதாபியில் ஏவுகணை வீச்சு.. ஒருவர் பலி - இந்திய தூதரகம் அவசர எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் அபுதாபியில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய 'ஆபரேஷன் எபிக் பியூரி' தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இன்று (பிப்ரவரி 28, 2026) வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியது.
அபுதாபியில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு மண்டலம் இடைமறித்து அழித்தபோது, அதன் சிதறல்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்தன. இதில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனமான 'வாம்' உறுதிப்படுத்தியுள்ளது.

அதிர்ச்சிச் சத்தங்கள்: அபுதாபியின் கார்னிச், அல் தஃப்ரா மற்றும் அல் பதீன் பகுதிகளில் தொடர்ச்சியாக ஐந்துக்கும் மேற்பட்ட வெடிச் சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கட்டிடங்களின் ஜன்னல்கள் அதிர்ந்தன. தாக்குதல் தொடங்கியவுடன், அபுதாபி குடியிருப்பாளர்களுக்குத் தங்களது மொபைல் போன்களில் அவசர எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டன. பொதுமக்கள் ஜன்னல்களை விட்டு விலகி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அபுதாபி மட்டுமின்றி, துபாய், பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலும் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இங்குள்ள அமெரிக்காவின் 5-ஆவது கடற்படைத் தளத்தின் சேவை மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது வான் எல்லைக்குள் நுழைந்த ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாகக் கத்தார் ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலைக் "கோழைத்தனமான செயல்" என்று கண்டித்துள்ள அமீரக வெளியுறவு அமைச்சகம், இதற்குப் பதிலடி கொடுக்கத் தங்களுக்கு முழு உரிமை உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவுவதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
