கிருஷ்ணகிரியில் மாயமான சிறுவன் சென்னையில் பத்திரமாக மீட்பு - சாமர்த்தியமாக செயல்பட்டு சிறுவனைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டியூஷன் வகுப்பிற்குச் சென்ற வழியில் திடீரென மாயமான 12 வயது பள்ளி மாணவன் சஞ்சய், சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சமயோசிதமாகச் செயல்பட்டு சிறுவனைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் சஞ்சய், கடந்த சில தினங்களுக்கு முன்பு டியூஷன் வகுப்பிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் திடீரென மாயமானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை காவல்துறையினர், தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த சிறுவன் சஞ்சய், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக அங்குள்ள ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளான். தனியாகவும், அச்சத்தோடும் இருந்த சிறுவனைக் கண்டு சந்தேகமடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், உடனடியாகச் சிறுவனிடம் கனிவாகப் பேசி விவரங்களைக் கேட்டு அறிந்துள்ளார். சிறுவனின் பதிலில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் இருந்ததால், தாமதிக்காமல் அவனை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
காவல்துறையினர் சிறுவன் சஞ்சயிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் பெற்றோர் கண்டித்து திட்டியதால் அவர்கள் மீது ஏற்பட்ட கோபத்தில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு ரயில் மூலம் வந்தது தெரியவந்தது. உடனடியாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கும், சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சென்னை விரைந்துள்ள பெற்றோரிடம் சிறுவனைப் பத்திரமாக ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளைச் சென்னை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக மகனைத் தேடித் தவித்து வந்த பெற்றோர், சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்ட தகவலை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
