கன்னத்தில் பளார் விட்ட மு.க.அழகிரி மகள் கைது... ஜாமீனில் விடுவிப்பு!

 
அழகிரி கயல் கயல்விழி

சென்னையில் வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியைக் காவல்துறையினர் கைது செய்து, பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான வணிக வளாகக் கட்டிடத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. கடந்த ஜூலை 20-ம் தேதி இந்த வங்கியின் லிப்ட் பழுதானதால், வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு கண்டித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேரடியாக வங்கிக்கு வந்த கயல்விழி, ஆத்திரத்தில் மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் முழுவதும் வங்கியின் மேலாளர் அறையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் துல்லியமாகப் பதிவானது.

கயல் அழகிரி

இந்த சம்பவம் தொடர்பாக வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் சாஸ்திரி நகர் காவல்துறையினர் கயல்விழி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

காவல்துறையினரின் சம்மனை ஏற்று, கயல்விழி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 3 மணி நேரம் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை விவரங்கள் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டன.

அழகிரி கயல்விழி

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கயல்விழியைக் கைது செய்த காவல்துறையினர், பின்னர் அவரை உடனடியாகக் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து கயல்விழி காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவம் தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.