தவெகவில் இணையும் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி - தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!

 
மு.க.அழகிரி மகள் கயல்விழி மு.க.அழகிரி மகள் கயல்விழி

திமுக முன்னாள் தென்மண்டல அமைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக தென் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழி, சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்துள்ளார். அங்கு தவெக அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சர்களை அவர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். முன்னதாக, தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிரம்மாண்ட விழாவிலும் கயல்விழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து தவெக தரப்புடன் அவர் காட்டி வரும் இந்த நெருக்கம், அவர் தவெக-வில் இணையப் போகிறார் என்ற அரசியல் யூகங்களை பலப்படுத்தியுள்ளது.

மு.க.அழகிரி மகள் கயல்விழி

இந்தத் திடீர் சந்திப்பைத் தொடர்ந்து, கயல்விழி விரைவில் தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணையப் போகிறார் என்றும், தென் தமிழகத்தில், குறிப்பாக மு.க.அழகிரியின் கோட்டையாகக் கருதப்படும் மதுரையில் தவெக-வின் முக்கிய முகமாக அவர் செயல்படத் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் கசிகின்றன.

மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக சார்பில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராகக் களம் இறங்குவதைக் குறிவைத்தே அவர் தற்பொழுது காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அழகிரி குடும்பத்தின் பின்னணி மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தவெக-வின் பலத்தை அதிகரிக்க உதவும் என அக்கட்சியின் நிர்வாகிகளும் நம்புகின்றனர்.

கயல்விழி அழகிரி

அமைச்சர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கயல்விழி, இந்த சந்திப்பு குறித்துத் தனது விளக்கத்தை அளித்துள்ளார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அமைச்சர்களை மட்டுமே மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினேன்" என்று அவர் மிகவும் சுருக்கமாகக் கூறிச் சென்றுள்ளார். அவர் இச்சந்திப்பை 'மரியாதை நிமித்தமானது' என எளிய முறையில் கடந்திருந்தாலும், திமுக-விற்கும் தவெக-விற்கும் இடையே தற்பொழுது கடும் அரசியல் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், கருணாநிதியின் பேத்தி தவெக அமைச்சர்களைச் சந்தித்திருப்பது அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.