திருநங்கைகள் மீது "சட்டத்தைத் திணிக்காதீர்கள்" - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 
ஸ்டாலின் ஸ்டாலின்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவிற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஒரு சமூகத்திற்கான சட்டத்தை அச்சமூக மக்களின் கருத்தைக் கேட்காமலேயே நிறைவேற்றுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருநங்கைகளுக்காக இயற்றப்படும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும்போது, சம்பந்தப்பட்ட அச்சமூக மக்களுடன் கலந்துபேசி, அவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் கேட்டறிந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும். யாருடைய பாதுகாப்புக்காக ஒரு சட்டம் இயற்றப்படுகிறதோ, அதே மக்களே அந்தச் சட்டத்தை வீதியில் இறங்கி எதிர்க்கும் சூழல் நிலவுவது மிகுந்த கவலையளிக்கிறது" என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருநங்கை

எந்த ஒரு சட்டத்தையும் மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்காமல், ஆழமாகச் சிந்தித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த அறிக்கையில் தமிழக அரசு திருநங்கைகளுக்காகச் செய்து வரும் சாதனைகளையும் முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்:

இந்தியாவில் முதன்முதலாகத் தமிழகத்தில் தான் 'திருநங்கைகள் நல வாரியம்' அமைக்கப்பட்டது. அரசுப் பேருந்துகளில் திருநங்கைகளுக்கு இலவசப் பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான முன்னுரிமையை உறுதி செய்யத் தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

திருநங்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தில், 'சுய-அடையாள உரிமை' பறிக்கப்பட்டு, மருத்துவக் குழுவின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே இந்த எதிர்ப்பிற்குக் மிக முக்கியக் காரணமாகும். திமுக எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்த நிலையில், தற்போது முதலமைச்சரும் தனது எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.