"ஆபாச நதியை உருவாக்கியதே மு.க.ஸ்டாலின் தான்" - விஜய் ஆவேசம்!

 
தாராபுரம்

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவகேலி செய்து பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தும் விதமாகத் திமுக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இதற்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். விஜய்யின் எக்ஸ் பதிவில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளதாக விஜய் சாடியுள்ளார்.

விஜய் டிராக்டர் விஜய்டிராக்டர் பிரச்சாரம்

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரான சத்தியபாமா குறித்து மு.க.ஸ்டாலின் உருவகேலி செய்து, மிகவும் அநாகரிகமான முறையில் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் "ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை" உருவாக்கியதே மு.க.ஸ்டாலின் தான் என்பதை அவரே பெருமையுடன் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

விஜய் பிரச்சாரம் டீ தேநீர்

ஜனநாயகத்திற்கு விரோதமான திமுகவின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் ஆபாசமும் வக்கிரமும் கலந்திருப்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள் என்று குறிப்பிட்டுள்ள விஜய், பெண்களை அருகில் வைத்துக் கொண்டே அருவருப்பாகப் பேசுவதில் வல்லவர்கள் இந்தக் கூட்டத்தினர் என்றும் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பெண்களை அவமதித்து வரும் திமுகவுக்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாகத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தாராபுரம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.