காட்டிக் கொடுத்த செல்போன்... திருவிழாவுக்கு சென்ற இளைஞரை அடித்துக் கொன்றதாக தந்தை, 2 மகன்கள் கைது!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உலகப் புகழ்பெற்ற முத்தாரம்மன் கோயில் தசரா விழா நடந்து முடிந்த நிலையில், தசரா திருவிழாவுக்குச் சென்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தந்தை மற்றும் அவரது இரு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள வில்லிக்குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் வேல்முருகன் (26). இவர் தனது அண்ணன் சதீஷ்குமார் மற்றும் உறவினர் மாதவனுடன் குலசேகரப்பட்டினம் பகுதிக்குச் சென்றிருந்தார்.அப்போது ஏற்பட்ட மோதலில் வேல்முருகன் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகத் தெரிகிறது. சதீஷ்குமார், மாதவன் ஆகியோரும் தாக்குதலில் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் கிடைத்த செல்போனை ஆய்வு செய்த போலீசார், அது தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் காலனியைச் சேர்ந்த காளிராஜ் (40) என்பவருடையது என்பதைக் கண்டறிந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், காளிராஜ் மற்றும் அவரது மகன்களான முத்துவிஜய் (18), இசக்கிராஜா (18) ஆகியோர் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோயிலுக்குச் சென்றபோது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தாக்குதல் நடந்ததாக வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் முழுப் பின்னணி மற்றும் தாக்குதலில் ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.இதற்கிடையில், வேல்முருகனின் உறவினர்கள் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உடன்குடி வில்லிக்குடியிருப்பு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
