செல்போன், லேப்டாப் உட்பட மின்னணு பொருட்கள் விலை உயர வாய்ப்பு... பிசிபி உற்பத்தியாளர்கள் திடீர் முடிவு!

 
பிசிபி பிசிபி

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் வர்த்தகப் பாதிப்புகள் ஏற்பட்டு  தொடர்கதையாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மின்னணு சாதனங்கள் தயாரிப்பிற்கு மிக முக்கிய தேவையான மூலப் பொருட்களின் விலையும் தட்டுப்பாடு காரணமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மின்னணு சுற்றுப் பலகை எனப்படும் பிசிபி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாமல் தவிக்கத் தொடங்கியுள்ளன.  

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க பிசிபி உற்பத்தியாளர்கள் அதன் விற்பனை விலையை 50 சதவீதம் வரை உயர்த்துவதற்குத் திட்டமிட்டு வருவதாக  தொழில்துறை வட்டாரங்கள் மூலம் தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடுமையான விலை உயர்வு நடவடிக்கை மட்டும் அமலுக்கு வந்தால், நுகர்வோர் பயன்படுத்தும் அத்தியாவசிய சாதனங்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

இதன் நேரடி எதிரொலியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன்கள், கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் ஆகியவற்றின் உற்பத்திச் செலவு பலமடங்கு அதிகரிக்கக் கூடும். இந்த கூடுதல் செலவினங்களால் சந்தையில் அனைத்து விதமான மின்னணு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து பொதுமக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.