"மோடி ஒரு பயங்கரவாதி "... சென்னையில் மல்லிகார்ஜுன் கார்கே சர்ச்சை பேச்சு... பாஜக கடும் கண்டனம்... பரபரப்பு வீடியோ!

 
கார்கே கார்கே

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவை விமர்சித்துப் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி ஒரு பயங்கரவாதி, அவரோ அல்லது அவரது கட்சியோ ஒருபோதும் சமத்துவத்தை நம்புவதில்லை. அப்படிப்பட்டவர்களுடன் அதிமுக எப்படி கைகோர்க்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியை நேரடியாக 'பயங்கரவாதி' எனக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கார்கேவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை இழிவாகப் பேசுவது ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிப்பதாகும்" என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கார்கே தனது கருத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த கார்கே, "பிரதமர் மோடி மத்திய விசாரணை முகமைகளை வைத்து எதிர்க்கட்சிகளை 'பயமுறுத்துகிறார்' (Terrorize) என்ற அர்த்தத்திலேயே தான் அவ்வாறு குறிப்பிட்டதாக"த் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரம் இன்றுடன் (ஏப்ரல் 21) நிறைவடைய உள்ள நிலையில், கார்கேவின் இந்த 'பயங்கரவாதி' விமர்சனம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது. ஒருபுறம் காங்கிரஸ் - திமுக கூட்டணி சமூக நீதிக்காகப் போராடுவதாகக் கூறி வாக்கு சேகரித்து வரும் நிலையில், மறுபுறம் பாஜக - அதிமுக கூட்டணி கார்கேவின் பேச்சைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயன்று வருகிறது. வரும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள், மக்களின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும்.