“மோடி எங்களோடு இருக்கிறார்... ஜீ உள்ளவரை ஜீபூம்பா நடக்கும்” - சி.வி.சண்முகம் பேச்சு
விழுப்புரம் அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், கல்விக்கடன் விவகாரம் மற்றும் பாஜக உடனான கூட்டணி குறித்துப் பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த சூரப்பட்டு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் சி.வி. சண்முகம் உரையாற்றினார்.

திமுக அரசு கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது எனக் கூறுவது பொய் வாக்குறுதி என்று விமர்சித்த அவர், "அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக்கடனை அரசே ஏற்று செலுத்தும்" என உறுதி அளித்தார். மேலும், "எங்கள் கூட்டணியில் பிரதமர் மோடி 'ஜீ' இருக்கிறார். அவர் இருக்கும் வரை 'ஜீபூம்பா' போல அனைத்தும் நடக்கும். கல்விக்கடனின் அசல் தொகையை மோடியிடம் பேசி குறைக்க வைப்போம்" எனத் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுவதை அவர் மறுத்தார். பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் குறைக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார்களுக்கு ஒருமுறை உதவித்தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இல்லை என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் பொய்களை மட்டுமே கூறி வருகிறார் என்றும் அவர் சாடினார். திமுக அரசு வெறும் விளம்பரங்களுக்காகத் திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதைத் தவிர, உருப்படியாக எதையும் செய்யவில்லை எனத் தனது உரையில் சி.வி. சண்முகம் கடுமையாகச் சாடினார்.
