"மோடி ஜி, எதைக் கண்டு பயப்படுகிறீர்கள்?" - ட்ரம்ப்பின் 'நரகக்குழி' விமர்சனத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்!

 
மோடி சோகம் மெளனம் மோடி சோகம் மெளனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை 'நரகக்குழி' (Hell-hole) என்று குறிப்பிடும் பதிவைப் பகிர்ந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

"மோடி ஜியின் ஆருயிர் நண்பரான 'நமஸ்தே ட்ரம்ப்', இந்தியாவைத் தரக்குறைவாக விமர்சிக்கும் குறிப்பைப் பகிர்ந்துள்ளார். ஆனால், இத்தகைய அபத்தமான பேச்சுகள் குறித்துப் பிரதமர் இன்னும் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்?" என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்ரம்ப் மோடி

"மோடி ஜி, நீங்கள் எதைக் கண்டு பயப்படுகிறீர்கள்? அமெரிக்காவின் வெற்றியில் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அப்படி இருக்கும்போது, இந்த விவகாரத்தை அமெரிக்க அரசின் உயர்மட்ட அளவில் கொண்டு செல்வதைத் தடுப்பது எது?" என அவர் வினவியுள்ளார்.

வர்த்தக ஒப்பந்தங்கள், 50 சதவீத வரி விதிப்பு மற்றும் முந்தைய தூதரக விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய கார்கே, "ஒவ்வொரு கட்டத்திலும் மோடி ஜி இந்தியாவின் நலன்களை அடகு வைத்து வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

கார்கே

தேர்தல் பிரச்சாரங்களில் பிஸியாக இருந்தாலும், 140 கோடி இந்தியர்களின் தன்மானத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்திற்குப் பிரதமர் பதில் அளிக்கச் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ட்ரம்ப்பின் கருத்துக்கள் "தகவலற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை" என்று கூறியிருந்தார். ஆனால், இந்த ஒரு வரிப் பதில் போதாது என்றும், பிரதமர் நேரடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.