மோடி - லீ சந்திப்பு... 4 லட்சம் கோடி வர்த்தகம் இலக்கு.... இந்தியா - தென்கொரியா இடையே அதிரடி ஒப்பந்தம்!
இந்திய மற்றும் தென்கொரியா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 4 லட்சம் கோடியாக உயர்த்த இரு நாடுகளும் பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்துள்ளன. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் லீ ஜே-ம்யுங், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். வர்த்தகம், கப்பல் கட்டுதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் செமி கண்டெக்டர் ஆகிய முக்கிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் பாலத்தை உருவாக்கவும், ஓராண்டுக்குள் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்தவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, கொரிய அதிபரின் இந்த வருகை இரு நாட்டு உறவிலும் ஒரு புதிய மைல்கல் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். சிப் தயாரிப்பு முதல் பிரம்மாண்ட கப்பல்கள் வரை அனைத்துத் துறைகளிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்றும், இது ஆசியப் பிராந்தியத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே இருந்த கலாச்சாரத் தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், தற்போது இந்தியாவில் கொரிய இசை மற்றும் நாடகங்களுக்கு உள்ள பெரும் வரவேற்பைச் சுட்டிக்காட்டினார். பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய குழுக்கள் அமைக்கப்பட உள்ளதோடு, கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் தடையின்றித் தொழில் தொடங்க பிரத்யேக தொழில்துறை நகரங்கள் நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்தார். இரு நாடுகளின் இந்தத் திடமான உறவு பொருளாதார ரீதியாகப் பெரும் வளர்ச்சியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
