மோடி ராஜினாமா.... குடியரசுத் தலைவரிடம் கடிதம்!

 
மோடி
 

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றியது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்வர் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மோடி

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.

அதேவேளை, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க சந்திரபாபு மற்றும் நிதிஷ் குமார் கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர இந்தியா கூட்டணி முயற்சிக்கலாம் என தகவல் வெளியானது.

இதற்கிடையே ஆட்சி அமைப்பது குறித்து இரண்டு கூட்டணிகளும் டெல்லியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தற்போதைய 17வது மக்களவையை கலைப்பது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும், 17வது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தையும் அளித்தார். அதனை குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டார்.

From around the web