பிரதமர் மோடி அஞ்சலி... சகோதரத்துவத்தால் ஒன்றிணைவோம்!
இந்தியா முழுவதும் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 14ம் தேதி புதன்கிழமை இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 1947 இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து பிரதமர் மோடி நினைவு கூர்ந்திருக்கிறார். இந்த பிரிவினையின்போது துயரத்தை எதிர்கொண்ட மக்களின் துணிச்சலுக்கு அஞ்சலி செலுத்துவதாக மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரமடைந்தது எவ்வளவு மகத்தான தருணமோ அதற்கு நேர் எதிரான தருணமாக அமைந்ததுதான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை. இதன் காரணமாக சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இரு நாடுகளிலிருந்தும் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்த பிரிவினையில் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். பலரின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் வடுவாக தொடர்ந்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டவுடன், இஸ்லாமியர்கள் எல்லோரும் பாகிஸ்தான் போக வேண்டும் என குரல் ஒலித்தது. இந்தக் குரல் மதவெறியாக மாறி, இடம்பெயரும் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலாக உருவெடுத்தது.
பதிலுக்கு இந்துக்கள் மீதும் பலதரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். பஞ்சாப்பில் சீக்கிய மதத்தை சேர்ந்த சிற்றூர் மக்கள் இடம்பெயர முயலும்போது கலவரக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை ஏற்படலாம் என்பதை உணர்ந்த அந்த வீட்டு பெரியோர்கள் தங்களது பெண்களை தற்கொலை செய்ய வலியுறுத்தினர்.
பெண்களும் வேறு வழியின்றி 80-90 என கூட்டமாக சேர்ந்து பாழும் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரை மாய்த்துக்கொண்டனர். கிணற்றில் சடலங்கள் அதிகமானதால் அடுத்தடுத்து விழுந்தவர்கள் உயிர் பிழைத்துக்கொள்ளும்படி ஆனது. இந்த தழும்பு சுதந்திர இந்திய வரலாற்றில் இன்னும் மறையாமல் இருக்கிறது. இதனைத்தான் பிரதமர் மோடி நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ளார். இது குறித்து மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் , “பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை நினைவு கூர்கிறோம். துயரத்தை எதிர்கொண்ட மக்களின் துணிச்சலுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இது” என பதிவிட்டுள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
