நாடாளுமன்றத்தில் மசோதா கவிழ்ந்தது... இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரை!

 
மோடி மோடி


 2029 லோக்சபா தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதற்காக 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. ஆனால், லோக்சபாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த மசோதாவிற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால், மசோதா பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.

மசோதா வெற்றி பெற 352 எம்பிக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், ஆதரவாக 298 எம்பிக்களும் எதிராக 230 எம்பிக்களும் வாக்களித்தனர். மோடி தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத பின்னடைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும், விவாதமும் டெல்லி முதல் சென்னை வரை அனல் பறக்கத் தொடங்கியுள்ளன.

இந்த பரபரப்பான சூழலில், இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மசோதா தோல்வி குறித்து அவர் விளக்கம் அளிப்பாரா அல்லது புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் அரசுக்கு ஏற்பட்ட முதல் பெரிய தேர்தல் கால பின்னடைவு இது என்பதால், பிரதமரின் இன்றைய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.