ரூ.17,900 கோடி வளர்ச்சித் திட்டங்கள்... ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மோடி சுற்றுப்பயணம்!

 
modi

பிரதமர்  மோடி நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரே நாளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளதுடன் சில திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டவுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு பன்னாட்டு விமான நிலையத்தைப் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். 5,640 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் அப்பகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணக்கம் மோடி

விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு போகாபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். அங்கிருந்தபடியே ஆந்திர மாநிலத்திற்காக மொத்தம் 17,900 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதில் புதிய சாலைகள், மின்சாரக் கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிச் சார்ந்த பல்வேறு பணிகள் அடங்கும். தென் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மோடி ஆலோசனை

ஆந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு அன்றைய தினம் பிற்பகல் 3:30 மணியளவில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்திற்குச் செல்கிறார். அங்கு மைசூருவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தா பண்பாட்டு இளைஞர் மையத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். 'விவேக ஸ்மாரகா' என்று அழைக்கப்படும் இந்த மையத்தில் இளைஞர்களின் தலைமைப் பண்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மையத்தைத் திறந்து வைத்த பிறகு அங்கு திரளும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.