பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த இருவர் !
மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இன்று மாலை நடைபெறும் உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இருவரைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களில் ரோகன் பரேக் (24 வயது) என்பவர் தான் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாகக் கூறிப் போலி அடையாள அட்டையைக் காட்டியுள்ளார். மற்றொருவர் தனது மெய்க்காப்பாளர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் அந்த அடையாள அட்டையைப் பரிசோதித்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததுடன், மெய்க்காப்பாளர் என்று கூறிய நபரிடமிருந்து ஒரு துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கியுடனும் போலி அடையாள அட்டையுடனும் பிரதமர் பங்குபெறும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் அத்துமீறி இருவர் நுழைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அவர்களுடைய செல்போன்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் இதர உடைமைகளையும் பரிசோதித்து வருகின்றனர்.
