நாகர்கோவிலில் மோடி - எடப்பாடி ரோடு ஷோ தொடங்கியது... கடலெனத் திரண்ட தொண்டர்கள்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் ஒரு மைல் தூரத்திற்குப் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தி வருகிறார்.
திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்தடைந்த பிரதமர் மோடி, மாலை 4 மணி அளவில் தனது ரோடு ஷோவைத் தொடங்கினார். நாகர்கோவில் வெப்பமூடு காமராஜர் சிலையில் தொடங்கி, மணிக்கூண்டு, ஜீவா சிலை, அண்ணா சிலை வழியாக வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் இந்த ரோடு ஷோ நிறைவடைகிறது.
திறந்த வாகனத்தில் பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். அதிமுக மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஒரே மேடையில் (வாகனத்தில்) தோன்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரைக் காண நாகர்கோவில், கிள்ளியூர், பத்மநாபபுரம் மற்றும் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மீது பிரதமர் மலர்களைத் தூவி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். "பாரத் மாதா கி ஜே" மற்றும் "மீண்டும் மோடி" என்ற முழக்கங்கள் அப்பகுதியையே அதிரச் செய்தன.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து நடத்தும் இந்தப் பிரச்சாரம் தென் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
