"மோடியின் கோழைத்தனம்" - இஸ்ரேல் சென்று திரும்பியதுமே ஈரான் மீது தாக்குதல்!

 
மோடி

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இஸ்ரேல் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. 

பிரதமர் மோடி தனது இரண்டு நாள் இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

போர்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் இருந்த சூழலில், பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றது "அவமானகரமானது மற்றும் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு" என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. தாக்குதல் நடக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்தும், இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்று விருது பெற்றதை "உயர்ந்த தார்மீகக் கோழைத்தனம்" என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்தியா எப்போதும் ஒரு சமநிலையான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த நிலையில், தற்போது மோடி அரசு ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலை ஆதரிப்பது இந்தியாவின் நீண்டகால ராஜதந்திரத்திற்கு எதிரானது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "மத்திய கிழக்கில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பே தற்போதைய முன்னுரிமையாக இருக்க வேண்டும்; அவர்களைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

அபுதாபி போர்

பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை இஸ்ரேல் சென்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது, "பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கும்" எனப் பேசியிருந்தார். இந்தப் பயணம் முடிந்து 48 மணி நேரத்திற்குள் 'ஆபரேஷன் எபிக் பியூரி' தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஈரானில் உள்ள இந்தியக் கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே குண்டுகள் விழுந்துள்ளதாகவும், அங்குள்ள இந்தியர்களின் நிலை குறித்து கவலை எழுந்துள்ளதாகவும் காங்கிரஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.