முகமது ஜோசப் விஜய்... கெத்து காட்டி வைரலாக்கிய தவெக தொண்டர்கள்!
தமிழக அரசியல் களம் தற்போது 'தளபதி' விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு, அக்கட்சியின் தொண்டர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் விவாதப் பொருளாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஒரு பேனர் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில் விஜய்யின் பெயருக்கு முன்னால் "முகமது" என்ற பெயர் சேர்க்கப்பட்டு, "முகமது ஜோசப் விஜய்" என்று அச்சிடப்பட்டிருந்தது. இது சாதாரணமான ஒரு பெய மாற்றமா அல்லது திட்டமிட்ட அரசியல் நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக நடிகர் விஜய்யின் முழுப்பெயர் 'ஜோசப் விஜய்' என்பது உலகம் அறிந்தது. ஆனால், திடீரென ஒரு மதத்தின் பெயரை அதனுடன் இணைப்பது ஏன்? தவெகவின் கொள்கை பாடலில் "மதச்சார்பற்ற சமூக நீதி" பற்றிப் பேசப்படுகிறது. அதை நிரூபிக்கவே தொண்டர்கள் இப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளைக் கவர எடுக்கப்பட்ட மலிவான முயற்சியோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஒரு தலைவரின் உண்மையான அடையாளத்தையே மாற்றிச் சித்தரிப்பது, அந்தத் தலைவரின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும் அபாயம் உள்ளது. இது போன்ற செயல்கள் வருங்காலத்தில் மற்ற அரசியல் கட்சிகளிலும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பதாகை வைரலானதைத் தொடர்ந்து, "அரசியலுக்காக மத அடையாளங்களை இப்படி விளையாட்டாகப் பயன்படுத்தாதீர்கள்" என்று நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர். "உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்ப வேண்டாம்" என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.
அரசியல் லாபத்திற்காக மதங்களை இணைப்பதும், பிரிப்பதும் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல. தொண்டர்களின் இத்தகைய அதீத ஆர்வம், கட்சித் தலைவருக்குப் பெருமை சேர்ப்பதை விட தர்மசங்கடத்தையே அதிகம் ஏற்படுத்துகிறது என்பதுதான் நிதர்சனம்.
