13 ஆண்டுகால பயணம் நிறைவு... முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு குட்பை !
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
36 வயதான முகமது ஷமி, கடந்த நவம்பர் 6-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவின் மூலம் இந்த முடிவை அறிவித்தார். இந்திய அணிக்காக முதன்முதலாக டெஸ்ட் சீருடை அணிந்த நாளிலிருந்து கிடைத்த அனுபவங்கள், வெற்றிகள், காயங்கள் மற்றும் மீண்டு வந்த தருணங்களை நினைவுகூர்ந்து அவர் தனது நன்றியைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஷமி தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். 13 ஆண்டுகால டெஸ்ட் பயணத்தில் 64 போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 6 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கடைசியாக 2023-ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும், உடற்தகுதி இருந்தால் உள்ளூர் நான்கு நாள் போட்டிகளிலும் பங்கேற்பேன் என்றும் ஷமி தெரிவித்துள்ளார்
