அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்... கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்!

 
லஞ்சம் ரெய்டு கட்டுகட்டாகப் பணம் லஞ்சம் ரெய்டு கட்டுகட்டாகப் பணம்

தெலங்கானா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு அதிகாரியின் வீட்டிலேயே கட்டுக்கட்டாகப் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் சிக்கிய இந்தச் சம்பவம் தெலங்கானா மற்றும் அண்டை மாநில அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி!! ரூ.25 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்!! 6 பேர் கைது!

தெலங்கானா மாநில சர்வே மற்றும் நில ஆவணங்கள் துறையின் துணை இயக்குநராகப் பணியாற்றி வரும் சுங்கரி நரஹரி ராவ் என்பவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெருமளவில் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன. இதனடிப்படையில், இன்று அதிகாலை முதலே சுங்கரி நரஹரி ராவ் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமான ஹைதராபாத், வாரங்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தனிப்படைகளாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

நரஹரி ராவின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொத்துக்களைக் கண்டு சோதனையிட்ட அதிகாரிகளே அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சோதனையின் முடிவில்  கணக்கில் வராத ரூ. 1.54 கோடி ரொக்கப் பணம் படுக்கையறை மற்றும் ரகசிய இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கிலோ கணக்கிலான தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

தங்கம்

ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் சார்ந்த சொத்து ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களின் தற்போதைய சந்தை மதிப்பு பல கோடிகளைத் தாண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தங்கத்திற்கான வருமான ஆதாரங்கள் குறித்துத் துணை இயக்குநர் சுங்கரி நரஹரி ராவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் அவர்  கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெலங்கானா ஏசிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.