விஏஓ வீட்டில் 51 சவரன் தங்க நகைகள், வெள்ளி, பணம் கொள்ளை!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹேமாவதி (28) சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள படப்பை அருகே வலையகரணை பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சங்கர் கடந்த 7ம் தேதி 11 மணியளவில் தங்களது வீட்டை பூட்டிவிட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மனைவி ஹேமாவதியுடன் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

விடுமுறை தினங்கள் முடிந்து நேற்று செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் கரசங்காலில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த 51 சவரன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி, 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் பதிவான கைரேகை மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் மவுண்ட் உதவி ஆய்வாளர் செபஸ்டியன் தலைமையில் மோப்ப நாய் டைசன் மூலம் சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் சிறிது தூரம் சென்று அதன் பின்னர் மோப்ப நாய் நின்று விட்டது. இதே போல் கைரேகை நிபுணர் உதவி ஆய்வாளர் பஷீர் ஆய்வு மேற்கொண்டதில் வீட்டில் கைரேகைப் பதிவு ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
