42 மாதங்களில் இல்லாத அளவு மொத்த விற்பனை விலை பணவீக்கம் உயர்வு!

 
பணவீக்கம் பணவீக்கம்
 

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் போது ஏற்படும் விலை மாற்றங்களை மாதம் தோறும் ஆய்வு செய்து இந்தத் தரவுகள் வெளியிடப்படுகின்றன. இதன்படி, கடந்த மார்ச் மாதம் 3.88 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 42 மாதங்களில் காணப்படாத மிகப்பெரிய உயர்வாகக் கருதப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாகப் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், மொத்த விற்பனை விலை பணவீக்கம் இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டியுள்ளது.

பணவீக்கத்தின் இந்தத் திடீர் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாகக் காய்கறிகள், உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் அரசு தரப்பிலிருந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.