உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7,000 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு "வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வை" திட்டத்தின் கீழ் உப்பளத் தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கமைய, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்ற தொழில்துறை மானியக்கோரிக்கையின்போது, தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் மழைக்கால நிவாரணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆண்டுதோறும் மழைக்காலத்தில் உப்புத் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட முடியாத இக்கட்டான சூழலில் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தற்போது ஐயாயிரத்திலிருந்து ஏழாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 2026-2027 ஆம் ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள 23,979 உப்பளத் தொழிலாளர் குடும்பங்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இத்தொகையை வழங்குவதற்காக இந்த ஆண்டிற்கு ஏற்படும் ரூ.16.78 கோடி செலவினத்தை முழுமையாகத் தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் இந்த நடவடிக்கைக்கு உப்பளத் தொழிலாளர்கள் தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
