மழைக்காலக் கூட்டத்தொடர்.. ஜூலை 19-ல் அனைத்துக் கட்சி கூட்டம்!

 
அனைத்து கட்சிக் கூட்டம் மக்களவை

புது தில்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரைச் சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க அதற்கு முந்தைய நாளான ஜூலை 19 அன்று மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் கூட்டப்படவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தொடரின் போது மத்திய அரசால் தாக்கல் செய்யப்படவுள்ள முக்கிய மசோதாக்கள், அவசரச் சட்டங்களுக்கு மாற்றான சட்ட வரைவுகள் மற்றும் நிதி சார்ந்த முக்கிய விவாதங்களை எவ்விதத் தடங்கலும் இன்றிச் சபையில் முன்வைப்பது குறித்து மத்திய அரசு விவாதிக்கவுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எவ்வித முடக்கமும் இன்றிச் சுமூகமாக நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மத்திய அரசு இதில் கோரிக்கை வைக்கவுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்

மறுபுறம், நாட்டின் தற்போதைய முக்கியப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரச் சூழல், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துச் சபையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளன.

எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் விதிகளுக்கு உட்பட்டுப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. ஜூலை 20 முதல் தொடங்கவுள்ள இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் பல்வேறு அரசியல் நகர்வுகளுடன் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், ஜூலை 19 அன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் அதற்கான முக்கியத் தொடக்கமாக அமையவுள்ளது.