விமானப்படையின் தவறான தாக்குதலால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - நைஜீரியாவில் சோகம்!

 
நைஜிரியா நைஜிரியா

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில், பயங்கரவாதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் இலக்கு மாறிச் சந்தையின் மீது விழுந்ததில், 100-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யோபே மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துச் சந்தைப் பகுதியில் ஏப்ரல் 11ம் தேதி தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், நைஜீரிய விமானப்படை போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக குண்டுகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த சந்தைப் பகுதியில் விழுந்து வெடித்தன.

மாணவர்கள் கடத்தல் நைஜீரியா

இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நைஜீரிய அரசு மற்றும் ராணுவத் தரப்பு இந்தத் தவறான தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ளது. இலக்கைத் தவறாகக் கணித்ததே இந்தத் துயரத்திற்குப் பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையின் போது ஏற்பட்ட இந்தத் தவறு வருத்தத்திற்குரியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்," என நைஜீரிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா

இந்தச் சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும், இது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

ஏற்கனவே மத்திய கிழக்கில் (ஈரான்-அமெரிக்கா) போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஆப்பிரிக்க கண்டத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சோகம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.