100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியான சோகம் - ஈரான் பள்ளி போர் நினைவிடமாக மாற்றப்பட்டது!
ஈரானில் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி தற்போது போர் நினைவிடமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் தொடங்கிய கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று, மினாப் பகுதியில் உள்ள ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பள்ளி உடனடியாக மூடப்பட்டு இயங்காமல் இருந்தது. தற்போது அந்தக் கட்டிடம் ஒரு போர் நினைவிடமாக உருவெடுத்துள்ளது. சேதமடைந்த பள்ளி வளாகத்திற்குள் கொல்லப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பத்திரிகையாளர்கள் அங்குச் சென்றபோது, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரும் பொதுமக்களும் அங்கு வந்து அமைதியாக அஞ்சலி செலுத்தி வருவதைக் காணமுடிந்தது. இதுகுறித்து மாகாண கவர்னர் முகமது அஷூரி தாசியானி கூறுகையில், "இந்தப் பள்ளி இனி எப்போதுமே இயங்காது; இந்தக் கட்டிடம் ஒரு போர் அருங்காட்சியகமாகவும் நினைவிடமாகவும் மாற்றப்படும்" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
