100க்கும் மேற்பட்ட திருமணங்கள்... விடுமுறை நாளில் திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

 
திருச்செந்தூர்

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் ஆவணி மாதச் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை முதலே வருகை தந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தங்களில் நீராடினர். பொது மற்றும் கட்டணக் வரிசைகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர்

முகூர்த்த நாளை முன்னிட்டு திருக்கோவில் நடை அதிகாலை 4:00 மணிக்குத் திறக்கப்பட்டது. தொடர்ந்து 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து உச்சிகால பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றன.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

ஆவணி மாதச் சுபமுகூர்த்த தினம் என்பதால், திருச்செந்தூர் கோவில் வளாகம், சண்முகவிலாச மண்டபம் மற்றும் சுற்றுவட்டாரக் திருமண மண்டபங்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குக் கோலாகலமாகத் திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் மற்றும் உறவினர்களின் கூட்டத்தால் பிஸியாகக் காணப்பட்டது.