10,000 பேர் உயிரிழப்பு - ஜெர்மனியை உலுக்கும் பயங்கர வெப்ப அலை!

 
வெப்ப அலை

மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வீசி வரும் கடும் வெப்ப அலை காரணமாக இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஐரோப்பாவில் வழக்கத்திற்கு மாறாக வீசி வரும் இந்த வெப்பக் காற்று பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாத இறுதியில் நிலவிய வெப்பக் காற்றினால் அந்நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 42°C (107.6°F) வரை பதிவாகி வரலாற்றுச் சாதனை படைத்தது: ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் வழக்கமான சராசரியை விட உயிரிழப்புகள் 32% அதிகரித்து, சுமார் 5,100-க்கும் மேற்பட்டோர் மடிந்தனர்.

வெப்ப அலை ஸ்பெயின் அமெரிக்கா

ஜூலை 13 முதல் 19 வரையிலான வாரத்தில் கூடுதலாக 1,900 பேர் பலியாயினர். தற்போது மீண்டும் வெப்பநிலை 39°C முதல் 40°C வரை உயர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் பெரும்பாலானோர் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். இதில் 85 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 5,420 ஆகும்.

ஆண்களை விட முதிய பெண்களே இந்த வெப்ப அலையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தீவிர வெப்பம் நேரடியாக மரணத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இதயம், சிறுநீரகம் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரத்தை அதிகரித்து மரணத்தைத் தழுவ வைப்பதால் மருத்துவ நிபுணர்கள் இதனை "அமைதியான கொலையாளி"   எனக் குறிப்பிடுகின்றனர்.

வெப்ப அலை வெப்பம் வெயில் ஐரோப்பா ஸ்பெயின்

ஜெர்மனியில் உள்ள மொத்த வீடுகளில் 19% வீடுகளில் மட்டுமே ஏர் கண்டிஷனர் வசதி உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் மின்சாரச் செலவு காரணமாகப் பல ஆண்டுகளாக ஏசி பயன்பாட்டை அந்நாடு தவிர்த்து வந்தது.

தற்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உடனடியாகக் குளிரூட்டும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும் மருத்துவ அமைப்புகளும் ஜெர்மனி அரசை வலியுறுத்தி வருகின்றன.