தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த 1,200 பேர் மீட்பு - அதிகாரிகள் தகவல்!
தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' மனநல சேவை திட்டத்தின் மூலம், தீவிர மன உளைச்சல் மற்றும் தற்கொலை எண்ணத்தில் இருந்த 1,200 பேர் உரிய ஆலோசனைகள் வழங்கி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்பானவர்களை இழப்பது, கடன் சுமை, காதல் தோல்வி மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகப் பலர் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை எனும் விபரீத முடிவை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.

இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மனநல வழிகாட்டுதல் வழங்கும் நோக்கில், 2022-ம் ஆண்டு 'நட்புடன் உங்களோடு' என்ற இலவச மனநல சேவை திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 14416 என்ற இலவச தொலைபேசி எண் மூலம், வாரத்தின் 24 மணி நேரமும் தங்குதடையின்றி மனநல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் செயல்பாடு குறித்துத் தகவல் தெரிவித்துள்ள மருத்துவத் துறை அதிகாரிகள், மனக்கவலை, பாலியல் துன்புறுத்தல்கள், குடும்ப உறவுச் சிக்கல்கள், தேர்வு பயம் மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த இலவச உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுள்ளனர்.

இவ்வாறு வந்த அழைப்புகளில், தீவிர மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை முடிவெடுக்கும் எண்ணத்தில் இருந்த ஏறக்குறைய 1,200 பேருக்குத் தகுந்த நேரத்தில் நிபுணத்துவ மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மனநலப் பிரச்சினைகளால் அவதியுறுவோர் எவ்வித தயக்கமுமின்றி 14416 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
