அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு!

 
கோவை அரசு மருத்துவமனை தவெக மிரட்டல்

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து, பணியில் இருந்த மருத்துவர்களை ஆபாசமாகத் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த சிறுவன் ஒருவனுக்கு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை குறித்துத் தவெக நிர்வாகிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வால்பாறை சிறுத்தை

இந்தச் வாக்குவாதத்தின்போது மருத்துவமனைக்குள் புகுந்த தவெக நிர்வாகிகள் 20 பேர், பணியிலிருந்த மருத்துவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், தவெக நிர்வாகிகள் 20 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.