ஜப்பானில் 2,700 ஏக்கர் காடு பற்றி எரிகிறது... காட்டுத்தீ காரணமாக 2,500 பேர் வெளியேற்றம்!

 
ஜப்பான் காட்டுத்தீ ஜப்பான் காட்டுத்தீ

ஜப்பானின் இவாதே மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய காட்டுத்தீ, தற்போது கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. பலத்த காற்று வீசுவதால் தீயானது வனம் கடந்து, மக்கள் வசிக்கும் ஓட்சுச்சி (Otsuchi) நகரத்தை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கலிபோர்னியா காட்டுத்தீ
தீயின் வேகம் அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்சுச்சி நகரில் வசிக்கும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தத் தீ விபத்தில் 8 கட்டிடங்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 2,700 ஏக்கர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி நாசமாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தரைவழியாகப் போராடி வரும் அதே வேளையில், ஜப்பானிய தற்காப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் வான்வழியாகத் தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மலைப்பாங்கான பகுதி என்பதால் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நீடிக்கின்றன.

காட்டுத்தீ

ஜப்பான் நாட்டில் வழக்கமாக மே மாதங்களில் காட்டுத்தீ அபாயம் இருக்கும் என்றாலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே இவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த இன்னும் சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.