ஜிம் பெயரில் சட்டவிரோத சூதாட்டம் - சேலத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டு தீவிர விசாரணை!
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் என்ற பெயரில் மறைமுகமாகச் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மனமகிழ் மன்றத்தில் நள்ளிரவில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் 'ஜிம்' என்ற பெயரில் இயங்கி வந்த மனமகிழ் மன்றத்தில் சமூக விரோதச் செயல்கள் மற்றும் சூதாட்டம் நடைபெறுவது குறித்த ரகசியத் தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்தது. இதனையடுத்து நள்ளிரவில் அங்கு திடீர் சோதனை நடத்தப்பட்டது.
காவல் துறையினர் நடத்திய இந்த சோதனையின் போது, அங்கே பதுங்கிச் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட நபர்களைக் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், அந்த மையத்தில் தமிழக அரசால் முழுமையாகத் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விற்கப்பட்டு வந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
