திருச்செந்தூர் கோவிலில் 500க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றம் - பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க நடவடிக்கை!

 
திருச்செந்தூர் திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகப் பகுதியில், பக்தர்களின் வழிபாட்டிற்கு இடையூறாக இருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளைத் திருக்கோவில் நிர்வாகம் அகற்றியுள்ளது.

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் இந்த எண்ணிக்கை லட்சங்களைத் தொடுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்ப, கோவில் வளாகத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கோவில் நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது.

கோவில் வளாகம், பிரகாரப் பகுதிகள் மற்றும் கடற்கரைக்குச் செல்லும் முக்கிய நடைபாதைகளை ஆக்கிரமித்து 500-க்கும் மேற்பட்ட சிறு கடைகள், பூ மற்றும் பூசைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும்போதும், நடந்து செல்லும்போதும் கடுமையான இடநெருக்கடியைச் சந்தித்து வந்தனர். விசேஷ காலங்களில் இந்த ஆக்கிரமிப்புகளால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுப் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

பக்தர்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாகம் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைக் கையில் எடுத்தது. கோவில் வளாகப் பகுதியைச் சுற்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.

இது குறித்து திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக் குறிப்பில்,  கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது.

திருச்செந்தூர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா... நாள் நேரம் அறிவிப்பு!

பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி, வரிசையில் நின்று சுலபமாக சுவாமி தரிசனம் செய்வதற்கும், அவர்கள் நடந்து செல்லும் நடைபாதைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த ஆக்கிரமிப்புகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளன.

கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் திருச்செந்தூர் கோவில் வளாகம் தற்போது ஆக்கிரமிப்புகளின்றிப் பரந்த அளவில் காட்சியளிக்கிறது. இதனால், சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்களும், பக்தர்களும் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.