5,60,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.. அசாம் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 21 பேர் பலி!
வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு நாளுக்கு நாள் பேராபத்தாக உருவெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ள பாதிப்புகளுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மாநிலத்தின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5.64 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால், வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடுவதால், பல கிராமங்களும் விவசாய நிலங்களும் நீரின்கீழ் மூழ்கியுள்ளன. பல இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களைப் படகுகள் மூலம் மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், வெள்ள நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
