நைஜீரியாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி முனையில் கடத்தல்!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நைஜர் மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், 60-க்கும் மேற்பட்ட பொதுமக்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
நைஜர் மாநிலத்தின் போர்கு (Borgu) உள்ளாட்சிப் பகுதிக்கு உட்பட்ட தேகாரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் கனரக ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதக் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளி வழிபாட்டின் போது தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களைச் சூழ்ந்துகொண்ட பயங்கரவாதிகள், துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர் எனக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்ட பொதுமக்களைப் பத்திரமாக மீட்கக் கூட்டுப் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரியாவில் பணப்பறிப்பிற்காகப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களைக் கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
