3 வயது சிறுவன் காலில் சூடு வைத்த தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை ... திருப்பூரில் பரபரப்பு!

 
திருப்பூர்

 

புதுச்சேரியைச் சேர்ந்த சுஜாதா (வயது 23) என்பவருக்குத் திருமணமாகி 3 வயதில் மகன் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் அவர் தினேஷ்குமார் என்பவரை 2-வதாகத் திருமணம் செய்துகொண்டு, திருப்பூர் மங்கலம் சாலை கோழிப்பண்ணை பகுதியில் மகனுடன் வசித்து வந்தார். இருவரும் வேலைக்குச் செல்வதால் மகனை அருகில் உள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், அங்கன்வாடியில் அந்தச் சிறுவன் மிகுந்த சோர்வுடனும் நடக்க முடியாமலும் தவிப்பதைக் கவனித்த அங்கன்வாடி ஊழியர், அவனைச் சோதித்துப் பார்த்தபோது அவனது காலில் சூடு வைக்கப்பட்டிருந்ததையும் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்துக் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் குழந்தையைத் திருப்பூர் மத்தியப் போலீ யாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவனுக்குச் சூடு வைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுவனின் தாய் சுஜாதா மற்றும் வளர்ப்புத் தந்தை தினேஷ்குமார் ஆகிய இருவரையும் மத்தியப் போலீசார் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்பில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டான்.