6 வயது மகளை வெறித்தனமாய் தாக்கிய தாய்... காரணத்தைக் கேட்டு கைது செய்த போலீசார்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது ஆறு வயது பெண் குழந்தை செல்போனில் இருந்த சமூக வலைதளச் செயலிகளை நீக்கியதால் ஆத்திரமடைந்து, குழந்தையை மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட தாயைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபா. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்த நிலையில், தனது இளம் பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பிறகு விஷ்ணு என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இரண்டாவது கணவர் விஷ்ணு வேலைக்குச் சென்றுவிடும் நேரங்களில், ஷோபா தனது நாள்களை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடுவதில் கழித்துள்ளார். நாளடைவில் சமூக வலைதளங்களுக்கு முழுமையாக அடிமையாகிவிட்டதால், தனது ஆறு வயது பெண் குழந்தையைக் கூட அருகில் வைத்துப் பராமரிக்கவோ அல்லது கவனிக்கவோ அவருக்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை எனத் தெரியவருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி மதிய வேளையில், ஷோபா வீட்டில் இல்லாத அல்லது கவனமிலாத நேரத்தில் அவரது சிறுமி செல்போனை எடுத்து விளையாடியுள்ளாள். அப்போது சிறுவத்தனமாக விளையாடிய அந்தச் சிறுமி, எதிர்பாராதவிதமாகத் தாயின் செல்போனில் இருந்த வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட முக்கியச் சமூக வலைதளச் செயலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டாள்.
சிறிது நேரம் கழித்துத் தனது செல்போனைப் பார்த்த ஷோபா, அதில் தான் மணடிக்கடி பயன்படுத்தி வந்த செயலிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்துள்ளார். தன் கைப்பேசியில் இருந்த செயலிகளை அழித்த ஆத்திரத்தில் தன் சொந்தக் குழந்தையென்றும் பாராமல் தன் கட்டுப்பாட்டை இழந்த அவர், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்துச் சிறுமியைச் சரமாரியாகத் தாக்கியதுடன், ஆத்திரத்தில் தரையிலும் தூக்கி வீசியுள்ளார். இந்தத் தாக்குதலில் சிறுமியின் தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தனது கொடூரத் தாக்குதலால் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த குழந்தையைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, தன் மீதான குற்றத்திலிருந்து தப்பிக்க ஷோபா ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். கடந்த 9-ஆம் தேதி அன்று தனது மகள் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாகக் கூறி அவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளார்.
சிறுமையின் உடல் முழுவதும் காணப்பட்ட மோசமான காயங்களைக் கண்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இந்தத் காயங்கள் கட்டிலில் இருந்து விழுந்தது போன்ற இயல்பான காயங்களாக இல்லை என்பதை உடனடியாக உணர்ந்தனர். உடனடியாக மேல்சிகிச்சைக்காகச் சிறுமியை நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து நெய்யாற்றின்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

மருத்துவர்களின் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த நெய்யாற்றின்கரை காவல் நிலையக் காவல்துறையினர், சிறுமியின் தாயான ஷோபாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாலும், காவல்துறையினரின் தொடர் மற்றும் தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சமூக வலைதளச் செயலிகளை நீக்கியதற்காகத் தாயே தன் கைகளால் குழந்தையை மரக்கட்டையால் அடித்துத் துன்புறுத்தியது விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய ஷோபா மீது காவல்துறையினர் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். சமூக ஊடக அடிமைத்தனத்தினால் பெற்ற தாயே தன் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
