மகன் இறந்த ரயில்வே தண்டவாளத்தைப் பார்த்த அடுத்த நாளே தாயும் தற்கொலை - சென்னையில் சோகம்!

 
தாய் மகன்

 

சென்னை பல்லாவரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகனும், தாயும் அடுத்தடுத்த நாட்களில் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்து, மகனின் முகத்தைப் பார்த்து வாழ்ந்து வந்த ஒரு தாயால், மகனின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாததே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த ஒரு பகுதியில் வசித்து வந்தவர் காயத்ரி. பூ வியாபாரம் செய்து வந்த இவருடைய கணவர் ஏற்கனவே காலமான நிலையில், தனது மகன் பாலாஜியை (திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்) நம்பியே இவர் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாஜி, குடும்பப் பிரச்சினை காரணங்களால் பல்லாவரம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.

மகன் இறந்த துயரத்தில் இருந்து மீள முடியாத தாய் காயத்ரி, நேற்று தன் மகன் பாலாஜி உயிரை மாய்த்துக் கொண்ட அந்த ரயில்வே தண்டவாளப் பகுதிக்கு நேரில் சென்று பார்த்துவிட்டு, கண்ணீர் மல்க வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

மகன் இறந்த அதே இடத்தில் நின்று அந்த நினைவுகளோடு வீடு திரும்பிய காயத்ரி, இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தன் கண் முன்னே வளர்ந்து, தங்களுக்குப் பக்கபலமாக இருந்த மகன் இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பாமல் அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், காயத்ரியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த அடுத்தடுத்த மரணங்கள் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த நாட்களில் மகனும், தாயும் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.