3 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை - கிணற்றில் சடலமாக மிதந்த 4 உடல்கள்!
தர்மபுரி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தாய் ஒருவர், தனது 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்ப பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் அமைந்துள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில், நேற்றிரவு உடல் ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அதியமான்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் ஆய்வு செய்தபோது, கிணற்றில் மேலும் 3 உடல்கள் மிதப்பது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்ட அந்த உடல்கள், ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் எனக் கண்டறியப்பட்டது.

விசாரணையில், உயிரிழந்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான சரவணன் என்பவரின் மனைவி அம்சா (35), மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6) மற்றும் 3 வயது மகன் குமரன் என்பது தெரியவந்தது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இரவு அம்சாவுக்கும் அவரது கணவர் சரவணனுக்கும் இடையே கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அம்சா, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்குத் தான் சென்றிருப்பார் என சரவணன் நினைத்த நிலையில், அவர் அங்குச் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து இரு குடும்பத்தினரும் கடந்த இரண்டு நாட்களாக அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அம்சாவின் பெற்றோருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றிலேயே 3 குழந்தைகளையும் தள்ளிக் கொன்று, அம்சாவும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. நான்கு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
