மதுபோதையில் 9 மாதக் குழந்தையை ஏரியில் மூழ்கடித்துக் கொன்ற தாய்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மதுபோதையில் பெற்றத் தாயே தனது 9 மாதப் பெண் குழந்தையை ஏரியில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹைதராபாத் நகரப் பகுதிக்கு உட்பட்ட பைராமுல்குடா ஏரியில் இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
லோகசானி ராஜேஸ்வரி (34) என்ற பெண், கடுமையான மதுபோதையில் தனது 9 மாதப் பெண் குழந்தையான அனுராதாவை மாலை 6:30 மணியளவில் ஏரி நீருக்குள் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எல்.பி.நகர் காவல்துறையினர், கொடூரச் செயலில் ஈடுபட்ட தாய் லோகசானி ராஜேஸ்வரியைக் உடனடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த 9 மாதக் குழந்தையின் சடலத்தைக் காவல்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் புகழ்பெற்ற உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் இத்தகைய கொடூர முடிவை எடுத்ததற்கான பின்னணி என்ன, குடும்பப் பிரச்சினையா அல்லது போதையின் தீவிரத்தால் நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
