போதையில் தகாத முறையில் நடந்தான், இரும்புக் கம்பியால் மகனை அடிச்சே கொன்னுட்டேன்... தாய் பரபரப்பு வாக்குமூலம்!

 
மதுரை

 

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஐயம்மாள் என்பவரின் மகன் ராஜா. முப்பத்து இரண்டு வயதான இவர் தீவிர மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால் மனைவி மற்றும் குழந்தைகள் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர். மேலும் இவர் மீது சில குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கடுமையான போதையில் வீடு திரும்பிய ராஜா, தனது தாயிடம் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது தாயை அவர் தவறான முறையில் நடத்தவும் முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஐயம்மாள் தற்காப்புக்காக மகனைத் கீழே தள்ளி இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ராஜா நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை வீட்டின் அருகில் கழிவறைக்காகத் தோண்டியிருந்த பள்ளத்தில் புதைத்துவிட்டு ஐயம்மாள் உண்மையை மறைத்துள்ளார். கிராம மக்களின் சந்தேகத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று உண்மையை ஒப்புக் கொண்டு சரணடைந்தார்.